1181. பொருவதோ வெளிதி யாங்கள் பொருந்திற முரைமி னென்னை
மருவிய மனிதப் போரோ வான்கெழு தெய்வப் போரோ
இருமையி னியன்ற போரோ யாதுநாந் துணிவ 1தென்றான்
விரிசிறை யுவணஞ் சேர்ந்த 2வென்றிநற் கொடியி னானே.
 

     (இ - ள்.) விரிசிறை உவணம் சேர்ந்த வென்றி நற்கொடியினான் ஏ - விரிந்த
சிறகுகளோடே கருடனை எழுதப்பட்ட வெற்றிமிக்க நல்ல கொடியையுடைய கருடத்துவசன்
என்பான், பொருவதே எளிது - யாம் அம் மானுடரைப் போர்செய்து வெல்லல் மிக
எளியதொரு செயலேயாம், யாங்கள் பொருந்திறம் உரைமின் - இனி யாம் சென்று
அவர்களுடன் போராடும் தன்மையைக் கூறுங்கோள், என்னை? - இஃதென் வினவினை
எனில், மருவிய மனிதப் பேரோ? - பொருந்திய மனிதர்களுடனே எதிர்ந்து
செய்வதற்கியன்ற மானிடப் போர் ஆற்றுதலோ அன்றி, வான்கெழு தெய்வப்போரோ -
விசும்பிற் கூடிய தேவர்களுடனே எதிர்ந்து செய்யும், தெய்வப்போரோ அன்றி, இருமையின்
இயன்ற போரோ - தேவமானுடர் இருவர்க்கும் பொருந்திய இடை நிகரவாகிய போரோ,
யாது நாம் துணிவது என்றான் - இம்முவ்வகைப் போருள் எந்தப் போரினை அவருடன்
யாம் செய்வது இயம்புங்கோள் என்று வினவினான், (எ - று.)

     உவண கேது பின்னர்க் கூறுகின்றவன், பொருதல் எனிதே; அதுபற்றி எண்ணற்க;
யாம் அவருடன் பொருங்கால், முவ்வகைப் போரில், எதனை மேற்கொண்டு பொருவது
அதனைக் கூறுங்கோள், என்றான், என்க.
 

( 51 )