(இ - ள்.) படைக்கல விகற்பும் - போர்க்கருவிகளின் வேறுபாடுகளையும், போரின் பகுதியும் - போர்த்தொழிலின் கூறுகளையும், இடைப்புகுந்து பரப்பின் உரைப்பில் - அவற்றின் உட்புகுந்து ஆராய்ந்து விரித்துக் கூறத் தொடங்கினால், ஆங்கண் சாலப் பெருகும் - அவ்விடத்தே மிக விரிந்து செல்லும், அஃது இருக்க - ஆதலால் அவ்வாராய்ச்சி யீண்டைக்கு அமைவதாக, என்று - என்று கூறி, மக்களோடு மக்கட்போர் நடப்பது நல்லவேனும் - யாம் மனிதரோடே போர்செய்யப் புகுதலால் மனிதப் போரே செய்தல் நன்றெனினும், புடைப்புஇல - அம் மனிதப் போரின்கண் இடப்பொருத்தமற்ற வேறு போர்கள், புகுதுமாயில் - கலப்புறுமானால், புறன்உரை புணர்க்கும் என்றான் - அச்செயல் நமக்குப் பழியுண்டாக்கும் என்றும் கூறினான், (எ - று.)படைக்கல விகற்பகங்களையும், போர் விகற்பங்களையும், கூறப்புகின் விரியுமாதலால், அது நிற்க; யாம் மனிதரோடே போராற்றலாலே மனிதப் போரே ஆற்றற்பாலது; அதன்கண் வேறு போர் கலப்புறின், அது நமக்குப் பழியாம் என்றான், என்க. |