பலரும் பலவாறு கூறல் | 1189. | விச்சையின் செருக்கி னாலும் வீங்குதோட் டருக்கி னாலுங் கச்சையங் களிற்றோ டேனைக் கவனமா வலத்தி னாலு மச்சுவக் கிரீவ னாதி யரசர்க ளழன்று வெம்போர் நச்சிமேல் வருப வாயி னன்றது போல்வ துண்டோ. | இது முதல் 7 செய்யுள் ஒரு தொடர் (இ - ள்.) அச்சுவக்கிரீவன் ஆதி அரசர்கள் - அச்சுவகண்டன் முதலிய உத்தரசேடிக்கண் உள்ள மன்னர்கள், விச்சையின் செருக்கினாலும், தாம் பயின்றுள்ள வித்தை மிகுதியால் உண்டாகிய மதத்தாலும், வீங்குதோள் தருக்கினாலும் - தம் பருத்த தோள்வலிமையாலாகிய மதத்தாலும், கச்சை அங்களிற்றோடு ஏனைக் கவனமா வலத்தினாலும் - கச்சையென்னும் கயிற்றையுடைய யானைப் படையினோடே, மற்றைய குதிரைப் படைப் பெருக்கத்தின் வலிமையுண்மையாலும், அழன்று - நம்மைச் சினந்து, வெம்போர் நச்சி - நம்மொடு வெவ்விய போர் ஆற்றுதலை விழைந்து, மேல் வருப ஆயில் - போர்மேற்கொண்டு வருவாராயின், அதுபோல்வது நன்று உண்டோ - நமக்கு அதைப் போன்ற நன்மை வேறியாதுளது? (எ - று.) அச்சுவகண்டன் முதலிய அரசர்கள், தம் செருக்காலும், படை வலத்தாலும், தருக்குற்றுச் சினந்து, நம்மேல் போர் ஆற்ற வருவாராயின், அது நமக்கு மிக நன்மையே ஆம்; என்றார் என்க. அவர்பால் நாமே வலிந்து போர்க்குப் போதல் வேண்டும்; அங்ஙனம் யாம் போகாமலிருப்ப அவரே வருவராயின், அது நன்மையே என்றபடி. | ( 59 ) | | |
|
|