நுதலிப்புகுதல்
119. புரிசை நீண்மதிற் போதன மாநகர்
அரசர் வார்த்தையவ் வாறது நிற்கவே
விரைசெய் வார்பொழில் விஞ்சையர் சேடிமேல்
உரையை யாமுரைப் பானுற நின்றதே.
 
     (இ - ள்.) புரிசை நீள்மதில் - உறுப்புக்களமைந்த நீண்ட மதிலாற் சூழப்பெற்ற;
போதனமா நகர் அரசர் வார்த்தை - போதனமாநகரத்து அரசரது செய்தி; அவ்வாறு அது
நிற்க - அத்தகையது, இனி அச்செய்தி நிற்க; விரைசெய் வார்பொழில் -
மணத்தையுண்டாக்குகின்ற நீண்ட பொழிலாற் சூழப்பெற்ற; விஞ்சையர் சேடிமேல் உரை -
வித்தியாதர உலகத்தின்கண் நிகழ்ந்ததாகிய செய்தி; யாம் உரைப்பான் உறநின்றது - யாம்
கூறுதற்குப் பொருந்தி நின்றது. (எ - று.)

     போதனபுரத்தில் வாழ்கின்ற அரசனான பயாபதியும் அவன் மக்களும்
ஆகியோருடைய செய்தியானது அவ்வாறு நிற்க; இனி விஞ்சையர் உலகின் செய்திகளை
நாம் சொல்லத் தொடங்குவோம் என்பதாம். வார்த்தை - செய்தி; வார்த்தா என்னும் வடசொல் தமிழ் முறைப்படி ஆவீறு ஐயாயிற்று. பின்னே மதில் என்று வருதலின் புரிசை
என்பதற்கு உறுப்புக்கள் என்று பொருள் உரைக்கப்பட்டது. இது தேவர் கூற்று. உரையை
என்புழி ஐகாரம் அசை. உரை - செய்தி.

( 1 )