1193. 3மானமர் நெடுங்க ணார்தம் மனமென வெஃகி மைந்த
ரூனமி லகல மூழ்கி யுள்ளுறச் சிவந்த வொள்வா
ளீனமா மருங்கி னாரா திரைக்கிடைந் தனல்ப வின்று
தானவர் குருதி மாந்தித் தம்பசி தணியு மென்பார்.
     (இ - ள்.) மானமர் நெடுங்கணார் தம் மனம் என வெஃகி - மான்கண்போன்ற நெடிய
கண்களையுடைய இளமகளிர்களுடைய நெஞ்சம் தம் காதலரின் அகலத்தை விரும்புமாறு
போலே, மைந்தர் ஊனமில் அகலம் மூழ்கி - மறவர்களினுடைய குற்றமற்ற மார்பினை
விரும்பி அதன்கண்புக்கு முழுகி, உள்ளுற - உடலுள்ளே பொருந்துதலாலே, சிவந்த
ஒள்வாள் -சிவப்புடையதாகிய ஒளியுடைய நம்முடைய வாட்படைகள், ஈனமா - தமக்கு
இளிவரவுண்டாக, மருங்கின் ஆராது - நம் இடையில் கட்டுண்டு கிடந்து பசித்து, இரைக்கு
இடைந்து - தம் இரையை வேட்டு வருந்தி, அனல்ப - கொதிக்கின்றன, இன்று -
இன்றைக்கு, தானவர் குருதி மாந்தி - அவ்வச்சுவகண்டனே முதலிய விச்சாதரருடைய
குருதியைப் பருகி, தம் பசி தணியும் என்பார் - தம் பசி தீரப்பெறும் என்று கூறுவார்,
(எ -று.)

ஆராது - உண்ணாது, காதலர் மார்பிலே விருப்பத்தோடே பாய்ந்து மூழ்கும் மகளிர்
கண்போல் பகைவர் மார்பிடத்தே மூழ்கும் நம் மறவாள், நம் மருங்கிற் கட்டுண்டு ஊண்
பெறாது பசித்துக் கனல்ப, இன்று விஞ்சையர் குருதியை நன்கு பருகிப் பசிதணியும் என்றார்
என்க.

( 63 )