அருக்ககீர்த்தியின் மறவுரை | 1197. | அடுந்திறல் வெகுளிக் காற்றோ டருக்கப்பே ருடைய மேகங் கொடுஞ்சிலை குலவக் கோலிக் குருதிநீர் வெள்ள மோடக் கடுங்கணை யென்னுந் தாரை கலந்துமேற் பொழிய வேந்தர் நடுங்கினர் பனிக்கும் போழ்தி னம்மையு மறிவ தென்றான். | (இ - ள்.) அடுந்திறல் வெகுளிக் காற்றோடு - கொல்லும் ஆற்றலுடைய சினம் என்னும் காற்றோடு கூடி, அருக்கப் பேர் உடைய மேகம் - அருக்ககீர்த்தி என்னும் பெயரையுடைய முகில் ஒன்று, கொடுஞ்சிலை குலவக் கோலி - கொடிய வில்லைப் பயில வளைத்து, குருதிநீர் வெள்ளம் ஓட - செந்நீர் வெள்ளம் பெருகிப் பாயும்படி கடுங்கணை என்னும் தாரை - விரைந்த செலவினையுடைய அம்புகள் என்னும் மழைத்தாரையை, கலந்துமேற் பொழிய - ஒரு சேரப் பொழியா நிற்ப, வேந்தர் பகைமன்னர்கள், நம்மையும் அறிவது - நம்முடைய ஆற்றலை அறிந்து கொள்வது, நடுங்கினர் பனிக்கும் போழ்தில் என்றான் - நடுங்கி வருந்தும் அந்தக் காலத்தேதான் என்று கூறினான், (எ - று.) சினமென்னும் காற்றோடே, அருக்ககீர்த்தி என்னும் முகில், வில் வளைத்துக், குருதி வெள்ளம் ஓடும்படி கணைகளாகிய தாரையை வீசும் போதன்றோ ! நடுங்கி, நம்மை அவர் மதிப்பது எனறான் என்க. | ( 67 ) | | |
|
|