இதுவுமது | 1199. | வானவர் மருள நாஞ்சின் மற்றிது மடுத்து மாற்றார் தேனம ரகல மென்னுஞ் செறுவுசெஞ் சால்கள் போக்கி யூனமர் குழம்பு பொங்க வுழுதிட்டு வென்றி வித்தி யேனவர் செவிக ளார விரும்புகழ் விளைப்ப னென்றான். | (இ - ள்.) வானவர் மருள - தேவர்கள் வியப்புறும்படி, நாஞ்சில் மற்றுஇது மடுத்து - கலப்பையாகிய இப்படையை ஊன்றி, மாற்றார் தேன்அமர் அகலம் என்னும் செறுவு - பகைவர்களின் வண்டுகள் விரும்புகின்ற மார்பாகிய வயல்களை, செஞ்சால்கள் போக்கி - செவ்விய படைச்சால்களைச் செலுத்தி, ஊன் அமர் குழம்பு பொங்க - ஊனாகிய சேறு மிகும்படி, உழுதிட்டு - உழுது, வென்றி வித்தி - வெற்றி என்னும் விதையை விதைத்து, ஏனவர் செவிகள்ஆர - மற்றையோர் செவிகளாகிய வாயால் உண்ணும்படி, இரும்புகழ் விளைப்பன் என்றான் - பெரிய புகழாகிய செந்நெல்லை விளைவிப்பேன் என்று இயம்பினான், (எ - று.) வானோர் வியக்குமாறு, இக் கலப்பையாலே பகைவர் மார்பாகிய வயலை உழுது, வெற்றியை விதைத்து, உலகினர் தம் செவியாகிய வாயாலே உண்ணப் புகழாகிய சாவியை, விளைப்பேன் என்றான் என்க. | ( 69 ) | | |
|
|