சுரமை நாட்டின் நானிலவளம்

12. வானிலங் கருவிய வரையு முல்லைவாய்த்
தேனிலங் கருவிய 1திணையுந் தேறல்சேர்
பானலங் கழனியுங் கடலும் பாங்கணி
நானிலங் கலந்துபொன் 2னரலு நாடதே.
     (இ - ள்.) நாடுஅது - அந்த நாடானது; வான் இலங்கு அருவிய வரையும் - பெருமை
பொருந்திய அருவிகளையுடைய மலைகளாகிய குறிஞ்சி நிலத்தையும்; முல்லைவாய் தேன்
இலங்கு அருவிய திணையும் - முல்லைமலர்களில் உள்ள தேன், நீர் அருவியை
ஒத்துப்பெருகுகின்ற காட்டிடமாகிய முல்லைநிலத்தையும்; தேறல்சேர் பானல் அம் கழனியும்
-
தேன் பொருந்திய நீலோற்பல மலரையுடைய அழகிய கழனிகளாகிய மருத நிலத்தையும்;
கடலும் - கடலிடமாகிய நெய்தல்நிலத்தையும்; பாங்கு அணி - பக்கத்தே கொண்டு
விளங்குவதாய்; நால்நிலம் கலந்து - இந் நால்வகைப்     

(பாடம்) 1. தினையும், 2. நரணும்.
 

     பட்ட நிலங்களும் பொருந்தி; பொன்நரலும் - பொருட்செல்வத்தால் எப்பொழுதும்
ஆரவாரமுடையதாயிருக்கும், (எ - று.)

     வான் இலங்கு : என்பதை வரைக்கு அடையாக்கி, விண்ணையளாவி விளங்கும்வரை
எனப் பொருள்கூறினும் பொருந்தும்.

     சுரமை நாடானது நானிலத்தையுங்கொண்டு அதனால் பொருட் செல்வத்தில்
சிறப்புற்றோங்குதலை இப்பாட்டில் கூறினார். நானிலங்களில் இரண்டொரு நிலங்களை
மட்டும் பெற்றுள்ள நாட்டிற்குச் செல்வ நலம் மிகுதியாக விளங்காது என்பதையும்
இப்பாட்டால் பெறவைத்தார். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வரிசைப்படி
கூறினார். பாலைக்கு
நிலமில்லை. “முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து பாலை என்பதோர்
படிவங்கொள்ளும்“ என்ப. நரலுதல் - ஒலித்தல் : பொன் ஒலித்தலாவது
பொருட்செல்வத்தால் பலவகைப்பட்ட ஆரவாரங்கள் நிகழ்தல். நாடது பொன்நரலும் :
இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
 

( 12 )