சடிமன்னன் திவிட்டனுக்குப் போர்மந்திரம் செவியறிவுறுத்தல்

1201. ஆங்கவன் மொழிந்த போழ்தி
     னமையுமிஃ 1திழிவ தன்றே
தேங்கம ழலங்கன் மார்ப
     வினிச்சிறி துண்டு நின்ற
தோங்கிய விஞ்சை நின்னா
     லுள்ளத்துக் கொள்ளற்பால
வீங்கிவை யென்ன லோடு
     மிறைவனைத் தொழுது கொண்டான்.
     (இ - ள்.) ஆங்கு அவன் மொழிந்த போழ்தின் - அவ்வாறு திவிட்டநம்பி
கூறியவுடனே, இஃது இழிவது அன்றே - இவ்வாறு நீ கூறுதல் உன் தகுதிக்குப்
பொருந்துவதல்லது கீழ்மையுடைத்தன்று, தேங்கமழ் அலங்கல் மார்ப - தேன்மணங்கமழும்
மலர்மாலையை அணிந்த மார்பனே, இனிச் சிறிதுண்டு நின்றது - இனிமேல் நினக்குக் கூற
வேண்டிய செய்தியும் ஒன்று என்பால் நின்றது, அஃதியாதெனில், ஓங்கியவிஞ்சை -
என்னிடத்துள்ள உயர்ந்த வித்தைகள், நின்னால் உள்ளத்துக் கொள்ளற்பால - அவை
உன்னால் பயிலப்பட்டு உனது நெஞ்சத்தே மறவாதேகொண்டு ஓம்பப்படும் தகுதியுடையன,
ஈங்குஇவை என்னலோடும் - அம்மந்திரங்கள், இன்னவைகளாம் என்று அவையிற்றைச்
செவியறிவுறுத்தவுடனே, இறைவனைத் தொழுதுகொண்டான் - சடிமன்னனை வணங்கித்
திவிட்டநம்பி அம்மறை மொழிகளை ஓதி உள்ளத்தேகொண்டான், (எ - று.)

இறைவனைத் தொழுது கொண்டான், அருகக்கடவுளை வணங்கி ஏற்றுக்கொண்டான்
எனினுமாம். நம்பி ! நீ கூறுவது உன் தகுதிக்குத் தக்கதே யன்றித் தகாததன்று; என்பால்,
சில விச்சையுள; அவையிற்றை நீ மனக்கொளல் வேண்டும், என்று ஓத, நம்பியும் அவற்றை
உளத்தே கொண்டான் என்க.

( 71 )