இரண்டு விஞ்சைத் தூதர் திவிட்டன்பால் எய்துதல்

1203. ஓதிய விஞ்சை வாய்ப்ப வுலகடிப் படாது நின்ற
வாதிசா லமர கற்ப மாமென வமருங் 2காலைத்
தூதுவ ருருவக் காளை செவிசுடு சரம்பெய் தூணி
மாதிரத் தொசிந்த வேபோல் வந்தொருங் கிருவர் நின்றார்.
       (இ - ள்.) ஓதிய விஞ்சை வாய்ப்ப - தன்னால் ஓதப்பட்ட மந்திரங்கள் தனக்குப்
பயன்படுவனவாகப் பொருந்தா நிற்ப, உலகு அடிப்படாது நின்ற - உலகத்தின் கண்ணே
பிறந்துழன்று வருகின்ற வழக்கொழிந்து நின்ற, ஆதி சால் அமர கற்பம் ஆம் என -
தலைமைத் தன்மை பொருந்திய தேவர்கள் வாழ்தற்கிடமான கற்பலோகத்திருக்குமாறு
போல, அமருங்காலை - இனிதின் அமர்ந்து வாழ்வுறும் காலத்தே, உருவக்காளை செவிசுடு
சரம்பெய்தூணி மாதிரத்து ஒசிந்தவேபோல் - அழகிய காளை போன்ற திவிட்ட
நம்பியினுடைய செவிகளைச் சுட்டெரிக்கும் நெருப்புப் பகழிகளை நிறையப் பெய்து
வைக்கப்பட்ட அம்புக் கூடுகள் வானிடத்தே இயங்கி வந்தனபோன்று, இருவர் தூதுவர்
ஒருங்கு வந்து நின்றார் - இரண்டு விச்சாதரராகிய தூதுவர்கள் வான்வழியாக ஒருசேர
வந்து திவிட்டனுக்கு முன்னர் நின்றார், (எ - று.)

சுடுசரம் பெய்தூணியைப் போன்ற தூதுவர்கள் என்க. அவர் கொண்டுவரும் செய்திகள் -
அம்புபோன்று இன்னா செய்வன வாதலின். அவற்றை அகத்தே சுமந்துவரும் தூதர்கள்
அம்புபெய்தூணிகளை ஒத்தனர் என்க. திவிட்டநம்பி சுயம்பிரபையோடு புதுமணம்
புணர்ந்தின்புற்றிருத்தலால், ஆதிசால் அமரகற்பத்தில் இருக்குமாறு போல இருக்கும்பொழுது
என்று உவமித்தார். ஆதி - இறைவன் எனினுமாம். அமரகற்பம் - தேவருலகம்.

( 73 )