அத்தூதர்கள் கூறும் செய்தி

1204. பொன்னவிர் திகிரி யாளும்
     1
புரவல ருரைப்ப வந்த
மன்னவன் றமரம் யாமே
     வாய்மொழி கேண்மின் மன்னீர்
கன்னியைத் 2தருதி ரோவக்
     கன்னியை மகிழ்ந்த காளை
யின்னுயிர் தருதி ரோவிவ்
     விரண்டிலொன் றுரைமி 3னென்றார்.
     (இ - ள்.) பொன்அவிர் திகிரி ஆளும் புரவலன் உரைப்ப வந்த - பொன்னொளி
விரியும் ஆழிப்படையையுடைய அச்சுவகண்டன் என்னும் மன்னவன் ஏவுதலாலே வந்துள்ள,
மன்னவன் தமரம்யாம் - அம்மன்னவனைச் சார்ந்த தூதர்கள் யாம், மன்னீர் - அரசர்களே,
வாய்மொழிகேண்மின் - எம்முடைய மொழியைக் கேளுங்கள், கன்னியைத் தருதிரோ -
சுயம்பிரபையை எம்மன்னனுக்குக் காணிக்கைப் பொருளாகத் தருவீர்களோ? அல்லது,
அக்கன்னியை மகிழ்ந்த காளை - அச்சுயம்பிர பையை மணந்துகொண்ட திவிட்டனுடைய,
இன்னுயிர் தருதிரோ - இனிய உயிரைத் தருவீர்களோ?, இவ்விரண்டில் ஒன்று உரைமின்
என்றார் - இவ்விரண்டில் உங்களுக்கு விருப்பமானதொன்றைத் துணிந்து கூறுங்கோள்
என்று கூறினர், (எ - று.)

யாங்கள் அச்சுவகண்டன் தூதர்கள்; அரசர்களே! எம்மொழி கேண்மின்; கன்னியைத்
தருதிரோ! அன்றேல் காளை இன்னுயிர் தருதிரோ! இரண்டில் ஒன்று துணிந்துரைமின்
என்றார், என்க.

( 74 )