இதுவுமது

1206. கண்கன லுமிழ்ந்துதம் புலமுங் காணல
வெண்கதிர் மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன்
புண்களு ளெஃகெறிந் தனைய புன்சொலால்
விண்களை வெதுப்பினன் வீர னென்பவே.
     (இ - ள்.) கண்கனல் உமிழ்ந்து தம் புலமுங் காணல - கண்கள் நெருப்பைக்
காலுதலால் தமது காட்சிப் புலனாகிய ஒளியைக் காணமாட்டாவாயின, வீரன் வெண்கதிர்
மணிமுத்தம் விதிர்க்கும் மேனியன் - மறத்தன்மை மிக்க திவிட்டன் வெண்சுடர்வீசும்
முத்தமணிகளைப் போன்ற வியர்வை நீர்த்துளிகளை உதிர்க்கும் உடலையுடையனாய்,
புண்களுள் எஃகு எறிந்தனைய புன்சொலால் - பழைய புண்களிலே வேற்படையை
எறிந்தாற் போன்று இன்னல் தருகின்ற தூதர் உரைத்த இன்னாச்சொல் காரணமாக,
விண்களை வெதுப்பினன் என்ப ஏ - விசும்பு முழுதும் வெப்பமுறச் செய்தான், என்று
கூறுவர், (எ - று)

விண்களை என்புழி கள் அசை எனலுமாம். கண்கள் தீக்காலுதலாலே,
தம்புலன்களைக் காணமாட்டா வாயின; முத்தம் போன்று உடலில் வியர்வை துளித்தது;
தூதர் உரைத்த புன்சொல் காரணமாக நம்பி விண்ணைத் தன் சினத்தீயால் வெதுப்பினன்,
என்க.

( 76 )