(இ - ள்.) தொக்கவானவர் - அம்மலைக்கண்கூடியதேவர்கள்; சூழ் குழலாரொடும் - நிறைந்த கூந்தலையுடையவர்களான தம் மகளிரோடும்; ஒக்க - ஒரு தன்மையை யுடையவர்களாக; ஆங்கு உளராய் - அவ்விடத்தே தங்குவோராய்; விளையாடலால் - இன்பமாக விளையாடி மகிழ்தலானே; சோலையின் ஊடெலாம் - பொழிலின் இடங்களிலெல்லாம்; உக்கசோதிகள் - அத்தேவர்கள் உடலிலிருந்தும் வெளிப்பட்ட ஒளிகளுக்கு; செக்கர்வானகமும் - செவ்வானமும்; சிறிது ஒக்கும் - சிறிது ஒப்புக்கூறற்கு ஏற்றதாகும். (எ - று.) தேவர்கள் பலர் தத்தம் உரிமை மகளிருடனே வெள்ளிமலையிடத்தில் வந்து தங்கி விளையாடுகின்றனர். அப்பொழுது அவர்கள் உடம்பின் ஒளி மலையில் உள்ள பொழில்கள் தோறும் வீசுகின்றது. அவ்வொளிக்குச் செவ் வானமும் சிறிது ஒப்பாக விளங்குகின்றது என்பதாம். தேவர்கள் செவ்வொளி படைத்த திருமேனியுடையோர். விண்ணுலகத் தேவர்கள் அதனினும் கீழ்ப்பட்ட வித்தியாதரர் உலகத்திற் பொழில் விளையாட வந்தது விண்ணுலகத்தினும் வித்தியாதரர் உலகம் இன்ப நிலையமாய் இயைந்துள்ளமையின் என்க. |