1214. கலைமிசை யினியசொற் கன்னி காளைதன்
னிலைமிசை யலங்கன்மார் பிசையக் கேட்டுமோர்
மலைமிசை மறைத்துவா யுரைக்கும் வல்லதிற்
1சிலைமிசைத் தோளினான் சேவ கங்களே.
     (இ - ள்.) கலைமிசை இனிய சொல்கன்னி - கலையின்பத்தினும் காட்டில் உயரிய
இனிமையுடைய சொற்களையுடைய சுயம்பிரபை நல்லாள், காளைதன் நிலைமிசை அலங்கல்
மார்பு இசையக் கேட்டும் - திவிட்டனுடைய உறுதியுடையதும் மேலே மலர்மாலை
அணியப்பட்டதுமாகிய மார்பினிடத்தே பொருந்திய செய்தியைக் கேள்வியுற்றிருந்தேயும், ஓர்
மலைமிசை மறைந்து - தான் தன் ஒப்பற்ற மலையிடத்தே ஒளிந்திருந்து, வாய் உரைக்கும் -
வெறும் வாயான் மட்டும் மறங்கூறும், மிசைசிலைத் தோளினான் - வில்மேலே
கிடக்கப்பெற்ற தோள்களையுடைய அச்சுவகண்டனுடைய, சேவகங்கள் வல்லதுஇல் -
ஆண்மையிற் சிறந்த ஆண்மை பிறிதில்லை, (எ - று.)

சிலைமிசைத் தோளினான் - கல்லினும் உயர்ந்த தோளான் எனினுமாம். அச்சுவகண்டன்
மலையில் மறைந்திருந்து கூறும் வறுஞ்சொல், அவன் ஆண்மையற்றவன் என்பதை
விளக்கும் என்றார், என்க.

( 84 )