தெய்வ மொழி உண்டாதல்

1216. என்றவர் மொழிதலு மெழுந்து தூதுவர்
சென்றன ராயிடைத் தெய்வ வாய்மொழி
1வென்றுவீற் றிருக்குமிவ் விடலை யேயென
நின்றது நிலமகள் பரிவு நீங்கினாள்.
     (இ - ள்.) என்று அவர் மொழிதலும் - என்று அம்மன்னர்கள் உரைத்தவுடனே,
தூதுவர் எழுந்து சென்றனர் - அவையிற்றைக் கேட்ட விச்சாதரதூதர் அவ்விடத்தை
விட்டுப் புறப்பட்டுச் செல்லா நின்றனர், ஆயிடை - அந்தச் செவ்வியில், தெய்வ
வாய்மொழி - தெய்வமாகிய அசரீரியின் மெய்ம்மொழி, “இவ்விடலையே வென்று
வீற்றிருக்கும்“ என நின்றது - “இத்திவிட்டநம்பியே அச்சுவக்கிரீவனை வென்று
நிலைத்திருப்பான் என்று எழா நின்றது, நிலமகள் பரிவு நீங்கினாள் - நிலம் என்னும்
நல்லாள் அல்லல் தீர்ந்த நெஞ்சினள் ஆயினள், (எ - று.)

என்று தூதர்க்குத் தகுந்த மாற்றங் கூறியவுடன் அவர் இறையருளால் உய்ந்தோமென
எழுந்து போயினர்; அவ்வமயம், அசரீரி நம்பிக்கு வென்றி வீற்றிருக்கும் என்றது: நிலமகள்
பரிவு தீர்ந்தாள் என்க.

( 86 )