சுரமையிற் றோன்றிய நன்னிமித்தங்கள்

1217. வரிவளை முரன்றன வான துந்துபி
திரிவன வறைந்தன செங்கண் டீப்பட
முரிவன வீரர்தம் புருவ 2மூரிவிற்
3பரிவிறை 4யின்றிவன் பாடி வட்டமே.
     (இ - ள்.) இவன் பாடி வட்டம் - இத்திவிட்ட நம்பியின் இருக்கையிடமெங்கும்,
வரிவளை முரன்றன - வரிகள் பொருந்திய சங்குகள் முழங்கின, வானதுந்துபி திரிவன
அறைந்தன - தேவதுந்துபிகள் எங்கும் சென்று சென்று முழங்கின, பரிவு இறையின்றி -
ஒரு சிறிதும் இரக்கமில்லாமல், வீரர்தம் செங்கண் தீப்பட - மறவர்களுடைய கண்களிலே
தீயுண்டாக, புருவ மூரியில் முரிவன - புருவங்களாகிய பெரிய விற்கள் வளைந்தன,
(எ -று.)

அப்பொழுது சுரமை நாட்டில் நன்னிமித்தங்கள் தோன்றின; அவை வருமாறு :-
சங்குகள் தாமே ஒலித்தன, வான துந்துபி முழங்கின, மறவர்கண்கள் தீச்சிந்தின, புருவங்கள்
வளைந்தன, என்க.

( 87 )