இதுவுமது

1218. ஆளியே றனையவ னணிபொன் மேனிமே
னீளொளி தவழ்ந்தது நெடுங்க ணேழையர்
தோளுமங் கிடவயிற் றுடித்த வீரர்கை
வாளும்பூ நின்றன மலர்ந்த 1துள்ளமே.
     (இ - ள்.) ஆளியேறு அனையவன் - ஆண் அரிமாவை ஒத்த திவிட்ட
நம்பியினுடைய, அணிபொன் மேனிமேல் - அணிகலன்களையுடைய அழகிய திருமேனி
மேலும், நீள்ஒளி தவழ்ந்தது - நீளிய ஒளி தவழ்ந்தது, ஏழையர் - மகளிர்களுடைய
நெடுங்கண் தோளும் - நீண்ட கண்களும் தோள்களும், அங்கு இடவயின் துடித்த -
அப்போது இடந்துடித்தன, வீரர் கைவாளும் பூநின்றன - மறவர்களுடைய கையிற்பிடித்த
வாட்படைகளும் தாமே கூர்மையால் பொலிவுடைத்தாய் விளங்காநின்றன, உள்ளம்
மலர்ந்தது - அவர்தம் உள்ளங்களும் மகிழ்ந்தன, (எ - று.)

நம்பியின் மேனியில் புத்தொளி தவழ்ந்தது; மகளிர் இடத்தோள் துடித்தன; வாள்
கூர்மையாற் பொலிவுற்றன; உளத்தே மகிழ்ச்சி முகிழ்த்தது, என்க.

( 88 )