அச்சுவகண்டன் நாட்டில் நிகழ்ந்த உற்பாதம்

1219. 2அரசிளங் குமரனை யனற்று 3மாற்றலர்
முரசினுண் மணியர 4வுறைந்த முத்தணி
5நிரைசுடர் நெடுங்குடை யகடு நெய்கனி
பிரசங்கள் புரைபுரை விலங்கப் பெய்தவே.
          (இ - ள்.) அரசு இளங்குமரனை - பயாபதி மன்னனின் இளைய மகனாகிய
திவிட்டநம்பியை, அனற்று மாற்றலர் - வெகுள்விக்கின்ற பகைவருடைய, முரசினுள்
மணிஅரவு உறைந்த - முரசமாகிய இசைக்கருவியினுள்ளே மணியையுடைய பாம்புகள்
வதிந்தன, முத்துஅணி நிரைசுடர் நெடுங்குடை அகடு - முத்துக்களால் அழகுறுத்தப்பட்ட
ஒளிவரிசையினையுடைய நீண்ட குடையின் அகத்தே, நெய்கனி பிரசங்கள் -
நெய்ப்புடைத்தாய்க் கனிதலையுடைய தேன், விலங்கப் புரைபுரை பெய்தவே -
தொளைகடோறும் இடையிட்டுத் துளித்தன, (எ - று.)
குடையினுள்ளே தேன்கூடு கட்டப்பட்டன என்க. இனி அச்சுவ கண்டன் திறத்து நிகழ்ந்த
தீநிமித்தம் கூறுகின்றார். மாற்றலர் முரசினுள் அரவுறைந்தன; குடையினுள்ளே தேன்
கூடுகட்டின, என்க.

( 89 )