பொழிலில் தார்மணம்

122. 3அவிழுங் காதல ராயர மங்கையர்
பவழ வாயமு தம்பரு கிக் 4களி
தவழு மென்முலை புல்லத் ததைந்ததார்
கமழ நின்றன கற்பகச் சோலையே.
 

     (இ - ள்.) கற்பகச்சோலை - கற்பகச் சோலைகள்; அவிழும் காதலராய் -
வெளிப்படுகின்ற இன்ப நோக்குடையவர்களாய் வானவர்கள்; அரமங்கையர் -
தேவமாதர்களது; பவழவாய் அமுதம் பருகி - பவழம் போன்ற வாயின் ஊறலையுண்டு;
களி தவழும் மென்முலை புல்ல - களிப்புப் பொருந்திய மிருதுவான கொங்கைகளைத் தழுவ; ததைந்ததார் - அதனால் நெருக்குண்ட மாலைகளின்
மணம்; கமழ நின்றன - வீசுமாறு அமைந்து விளங்கின. (எ-று.)

வானவர் எனப் பருகுதற்கும் புல்லுதற்குமுரிய எழுவாய் அவாய் நிலையான் வருவித்துக்
கொள்க. வானவரும் அவர்தம் மங்கையரும் பொழிலில் இன்பம் நுகர்ந்து இனிது
திளைக்கின்றனர். அவர்கள் ஒருவரையொருவர் தழுவும்போது அவர்கள் அணிந்துள்ள
மாலைகள் நெருக்குண்டு மணத்தை வெளிப்படுத்துகின்றன. அந்த நறுமணம்
பொழிலகமெல்லாம் வீசா நின்றது.
 

( 4 )