இதுவுமது | 1224. | வானமீ னுச்சியு ணின்ற 1மாற்றலர் தானையு ணடுவுவீழ்ந் ததிரத் தங்களுக் கூனமுண் டென்பதை யுணர்ந்து முள்ளிடை மானமஃ தொழிந்திலர் மறங்கொண் மன்னரே. | (இ - ள்.) உச்சியுள் - நண்பகற்போதில், நின்ற - மறையாமல் நின்ற, வானமீன் - விண்மீன்கள், மாற்றலர் - பகைவராகிய அச்சுவகண்டன் முதலியோர், தானையுள் நடுவு - படைகளின் இடையில், வீழ்ந்து அதிர - விழுந்து ஒலிக்க, தங்களுக்கு ஊனம் உண்டு என்பதை உணர்ந்தும் - தமக்குக் கேடு அணித்தாய் உளது என்பதை இவ்வுற்பாதங்களால் அறிந்துவைத்தும், மறங்கொள் மன்னர் - தறுகண்ணராகிய அவ்வரசர்கள், மானமது ஒழிந்திலர் - தம் மாண்பிறந்த மானத்திற் றவிர்ந்தாரில்லை, (எ - று.) நண்பகலில் மீன்கள் உதிர்ந்து அதிர்ந்தன; இத்தகைய தீநிமித்தங்களைக் கண்டும், அச்சுவகண்டன் முதலியோர் செருக் கொழிந்திலர், என்க. | ( 94 ) | | |
|
|