.வாடையின் வருகை

124 மங்குல் வாடைமந் தார்வன மீதுழாய்ப்
பொங்கு தாதொடு பூமதுக் கொப்பளித்
தங்க ராகம ளாயர மங்கையர்
கொங்கை வாரிகள் மேற்குதி கொள்ளுமே.
 

     (இ - ள்.) மங்குல் வாடை - முகில் அளாவிய வாடையானது; மந்தார் வனமீ துழாய்
- மந்தாரத் தருமிக்க காட்டின் மேல் வீசி அதனைத்துழாவி; பொங்கு தாதொடு - அதன்கட்
பொங்கிய மகரந்தப் பொடியோடு; பூமதுக் கொப்பளித்து - அம்மந்தார மலரினுள்ள
தேனையும் அளைந்து; அங்கராகம் அளாய் - பிற நறுமணப் பொருளின்மீதும் படிந்து;
அரமங்கையர் - தேவமாதர்களது; கொங்கைவாரிகள் மேல் - கொங்கைகளாகிய செண்டு
வெளிகளின்மேல்; குதிகொள்ளும் - குதித்தலைச் செய்யும். (எ - று.)

     துழாவிக் கொப்பளித்து அளாவி நறுமணத்தோடு வருகின்ற குளிர்
வாடையானது அரமங்கையர்களின் கொங்கைகளையே செண்டு வெளியாகக் கொண்டு
குதித்தலைச் செய்யும் என்க. செண்டுவெளி - ஆடுமிடம். மந்தாரவனம் - மந்தார் வனம்
என அகரம் கெட்டுநின்றது. மந்தாரவான் என்றும் வந்தார்வன என்றும் பாடம். மந்தாரம் -
ஐந்தருவினொன்று, மீ - மேல். துழாய் - துழாவி. அங்கராகம் - உடற்பூச்சிற்குரிய நறுமணப்
பொருள்கள். வாரி - யானை கட்டுமிடமுமாம்.
 

( 6 )

?@