தழைப்படுக்கை

125. தேன கத்துறை யுஞ்செழுஞ் சந்தனக்
கான கத்தழை யின்கமழ் சேக்கைமேல்
ஊன கத்தவர் போகமு வந்தரோ
வான கத்தவர் 1வைகுவர் வைகலே.
 

     (இ - ள்.) தேன் அகத்து உறையும் - தேனானது உள்ளே பொருந்திய; செழும் -
செழிப்புமிக்க; கானக சந்தன தழையின் - காட்டிடத்துத்தோன்றிய சந்தனக்குழையினாலாய;
கமழ் சேக்கைமேல் - மணம் வெளிப்படும் படுக்கையின்மேல்; ஊனகத்தவர் போகம்
உவந்து - மானிடர் நுகரும் நுகர்ச்சியைத் தாமும் நுகரவிரும்பி; வானகத்தவர் - தேவர்கள்,
வைகல் வைகுவர் - அம்மலையின்மேல் நாடோறும் வந்து தங்குவர். (எ - று.)

     எல்லாவகைச் சிறப்புக்களோடும் விண்ணுலகத்தில் இன்பம் நுகரும் வானகத்தவர்,
மண்ணகத்திற்கிழிந்து சந்தனத்தழையின் படுக்கைமேல் தங்கி மெய்யுறு
புணர்ச்சியின்பந்துய்க்கும் மண்ணகத்தவரைப் போன்று தாமும் இன்பந்துய்க்கக் கருதி
அங்குவந்து தங்குவர் என்பதாம். தேவர்கட்கு இத்தகைய நுகர்ச்சி யின்மையின் அதனை
அவாவினர் என்க. ஊனகத்தவர் - ஊனுடல் படைத்த மனிதர். வானவர் ஊனிலா
வுடம்பினர் என்பது இதனாற் போதரும்.
 

( 7 )