இதுவுமது | 1252. | நூற்பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போற்பயம் பலவொடு புகழ்க ளேதரும் வேற்பயங் கொண்டனர் 1விரவ லார்நமர் காற்பயங் கொண்டனர் கால வேலினாய். | (இ - ள்.) நூல் பயம் பலவொடு நுணங்கு கேள்வியே போல் - மெய்ந் நூல்களின் பயன்கள் பலவற்றைத் தன்பாற் கொண்டு நுணுகிய கேள்விச் செல்வத்தைப்போன்று, பயம் பலவொடு புகழ்களே தரும் - பல்வேறு பயன்களுடனே சிறந்த புகழையும் அளிப்பதாகிய, வேல் பயம்கொண்டனர் விரவலார் - வேற்படையின் பயனாகிய வெற்றியை நம் பகைவர்கள் கொள்வாராயினர், நமர் - நம் படைஞர்கள், கால் பயம் கொண்டனர் - வலிய காலாற் பெறும் பயனாகிய தோற்றுப் புறமிட்டோடி உய்தலைப்பெற்றனர், காலவேலினாய் - மறலிபோன்ற வேற்படையுடைய வேந்தே, (எ - று.) அங்ஙனம் கூறுகின்ற தூதன், பகைவர் வேலாலாய பயனை அடைந்தனர்; நமர் காலாலாய பயனை யடைந்தனர், என்றார் என்க, வேற்பயன் - வெற்றி. காற்பயன் - உடைந்தோடி உய்தல். | ( 122 ) | | |
|
|