(இ - ள்.) மஞ்சுதோய்வரை - முகில்கள் படிந்த அம்மலையின் கண்; மைந்தரொடு ஆடிய - ஆடவர்களொடு இன்பவிளையாடல் புரிந்த; அஞ்சில் ஓதியர் ஆர் அளகப்பொடி - அழகிய சிலவாகிய கூந்தலையுடைய மகளிர் அக்கூந்தலில் அப்பிய அரிய நறுமணச் சுண்ணம்; பஞ்சு அராகம் பதித்த பளிக்கறை - அவர்கள் நடந்தமையாலே அவர்களுடைய அடியிற் பூசப்பட்ட செம்பஞ்சுக்குழம்பின் நிறம் பொறிக்கப்பட்ட பளிங்குப்பாறையாகிய, துஞ்சு பாறைகள்மேல் துதைவுற்றது - அவர்கள் துயில்தற்கிடமான அப்பாறைகளின்மேற் படிந்தது. (எ - று.) ஓதியர் அளகப்பொடி அவரியங்கியபொழுது அவருடைய பஞ்சராகம் பதிக்கப்பட்டிருந்த பளிக்கறையாகிய அவர்கள் துயின்ற பாறைகளின் மேற் படிந்தது என்க. ஆர் - அரிய. அளகப்பொடி - கூந்தலிலப்பும் நறுமணப்பொடி. இதனை, “அளகத் தப்பிய செம்பொற் சுண்ணஞ் சிதர்ந்த திருநுதல்“ எனவரும் பெருங்கதையானும் (33 : 19 - 20) உணர்க. பஞ்சு - செம்பஞ்சுக் குழம்பு. அராகம் - நிறம். பளிக்கறையாகிய பாறை; துஞ்சுபாறை, எனத் தனித்தனி கூட்டுக. துதைதல் - படிதல். |