சுகண்டன் மறவுரை

1264. ஒத்திலங் கொண்சிறை யுவணன் றன்னொடு
பைத்திலங் கரவுகள் 1பகைப்ப போன்மெனக்
கைத்தலங் கையொடு புடைத்து நக்கனன்
தொத்திலங் கலங்கலான் சுகண்ட னென்பவே.
     (இ - ள்.) தொத்து இலங்கு அலங்கலான் சுகண்டன் - பூங்கொத்துகள் திகழும்
மலர்மாலை அணிந்த மற்றொரு தம்பியாகிய சுகண்டன் என்பான், ஒத்து இலங்கு ஓண்சிறை
உவணன் தன்னொடு - வரிசையின் ஒத்துத் திகழ்தலையுடைய ஒளிபொருந்திய சிறகமைந்த
கருடனுடனே, பைத்து இலங்கு அரவுகள் பகைப்ப போன்ம் என - படமெடுத்துத் திகழும்
பாம்புகள் அஞ்சாதே பகைத்தல் போலும் இம்மானிடப் பேதைகள் நம்மைப் பகைத்தல்
என்று கூறி, கைத்தலம் கையொடு புடைத்து நக்கனன் - கையோடு கைதட்டிச் சிரித்தான்,
(எ - று.)
போன்ம் - பொலும்.
சுகண்டன், கருடனோடே பாம்புகள் பகைப்பது போல, பேதை மானிடர் நம்மொடு
பகைத்தனர் என்று சொல்லிச் சிரித்தான் என்க.

( 134 )