விச்சாதரர் படை ஒருங்கெழுந்து போர் செய்தல்

1266. நஞ்சினை நஞ்சுசென் றெரிக்க லுற்றபோல்
விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி மேல்வர
வஞ்சமின் மணியொளி வண்ணன் றானையு
மெஞ்சலின் றெழுந்தெதி ரூன்றி யேற்றதே.
 
     (இ - ள்.) விஞ்சையர் வெஞ்சினம் பெருக்கி - விச்சாதரர்கள் வெவ்விய வெகுளியை
வளர்த்துக்கொண்டு, நஞ்சினை நஞ்சு சென்று எரிக்கலுற்றபோல் - ஒரு நஞ்சினை மற்றொரு
நஞ்சு பகைத்துச் சுட்டொழிக்கச் செல்வதுபோல, மேல்வர - போர் மேற்கொண்டு வராநிற்ப,
வஞ்சம் இல் மணிஒளி வண்ணன் தானையும் - வஞ்சகமில்லாத திவிட்ட நம்பியினுடைய
படையும், எஞ்சல் இன்று எழுந்து - குறைவின்றி எழுந்து, எதிர் ஊன்றி ஏற்றதே -
விச்சாதரர் படைக்கு எதிர் சென்று தடுத்துப் போர் செய்யத் தொடங்கியது, ஏ : அசை, (எ
- று.)
விச்சாதரர் சினமிக்கு ஒரு நஞ்சினை மற்றொரு நஞ்சு பகைத்து வருமாப்போல வர,
நம்பிபடையும் சென்று எதிர்த்த தென்க.

( 136 )