1276. | கறங்கெனக் காலசக் கரங்க டாமென மறங்கிளர் மன்னர்தம் மகுட நெற்றியு முறங்கலில் கடாக்களிற் றுச்சி மேலுமாய்த் திறங்கிளர் புரவிக டிரிதர் கின்றவே. | (இ - ள்.) கறங்கென - காற்றாடிகளைப் போன்றும், கால சக்கரம்தாம் என - காலமாகிய சக்கரத்தைப் போன்றும், மறங்கிளர் மன்னர்தம் மகுடநெற்றியும் - மறத்தன்மைமிக்க அரசர்களுடைய முடியணிந்த தலையின் மேலும், கடாக்களிற்று உச்சி மேலும் - ஆண் யானைகளின் மத்தகத்தின் மேலும், திறங்கிளர் புரவிகள் - ஆற்றல் சான்ற குதிரைகள், திரிதர்கின்றவே - திரிவனவாயின, (எ - று.) காலசக்கரம் - இடையறாது இரவும் பகலுமாய் மாறிமாறிச் சுழலும் காலவட்டம். மறலியின் சக்கரமுமாம். குதிரைகள் காற்றாடிபோன்றும், காலசக்கரம் போன்றும், அரசர் முடிமேலும், யானைகளின் உச்சிமீதும் சுழன்று திரிந்தன என்க. | ( 146 ) | | |
|
|