1277. | செம்பியல் கிடுகின செம்பொற் றட்டின வம்புபெய் தூணிய வரவத் தேர்க்குழாம் வெம்பிய கணைமழை விரவி வில்லொடு வம்புபெய் மழைமுகில் பொருவ போன்றவே. | (இ - ள்.) செம்புஇயல் கிடுகின - செம்பினால் இயன்ற கிடுகுடையனவும், செம்பொன் தட்டின - செம்பொன்னாலியன்ற தட்டினை உடையனவும், அம்புபெய்தூணிய - அம்புகள் செறிக்கப்பட்ட தூணிகளை உடையனவும், அரவத்தேர்க்குழாம் - முழங்குவனவுமாகிய தேர்க்கூட்டங்கள், வெம்பிய கணைமழை விரவிவில்லொடு - வெம்புதற்குக் காரணமான கணைமாரியோடுகூடி வில்லோடும், வம்பு பெய் மழைமுகில் புதுமையாகப் பொழிதலையுடைய மழைமேகம், பொருவ போன்றவே - போர்புரிவனவற்றை ஒத்தன, (எ- று.) செம்பாலாய கிடுகுகளையும் செம்பொன்னாலாய தட்டினையும், அம்புக் கூட்டினையும் உடைய தேர்க்கூட்டம் தம்பாலிருந்து கொடிய கணைமாரி பொழிதலால் முகில் வில்லோடு தோன்றிப் போர்புரிவதை ஒத்தன என்க. | ( 147 ) | | |
|
|