அருவிநீரில் மல்லிகை மணம்

128. ஆகு 2பொன்னறை மேலரு வித்திரள்
நாக கன்னிய ராடலின் ஞால்கைம்மா
வேக மும்மத வெள்ளம ளாவிய
போக மல்லிகை நாறும்பு னல்களே.
 

     (இ - ள்.) பொன் ஆகு அறைமேல் - பொன்னாகிய பாறைமேல் வீழாநின்ற;
அருவித்திரள் - அருவித்திரளில்; நாக கன்னியர் ஆடலில் - நாகருலகத்து மங்கையர்
நீராடுதலின்; ஞால் கைம்மா வேகம் மும்மதம் வெள்ளம் அளாவிய புனல்கள் -
தொங்குகின்ற துதிக்கையையுடைய யானைகளிடத்தினின்று விரைவாகச் சொரிகின்ற மூன்று
வகை மதநீர்களின் பெருக்குக் கலக்கப்பெற்ற அவ் அருவிநீர்கள்; போக மல்லிகை நாறும் -
அவ்வியானை மதமணத்தோடு போகநிலமாகிய நாகருலகத்து மல்லிகை மலர்களின் மணமும்
கமழா நிற்கும். (எ - று.)

     மும்மத வேழங்கள் படிந்தமையின் மதநாற்றம் வீசிநின்ற அருவி நீர், நாகலோகத்து
இளமகளிர் நீராடப்பெற்றமையின் அவர்கள் சூடியிருந்த நாகருலகத்து மல்லிகை மலர்களின்
மணமும் வீசலாயிற்று என்க. யானை மதமும் மணக்கும் என்பதனை, “மத்தநல் யானை
மதமும் நானமும், வாசப் பொடியொடுகா யத்துக்கமழ“ எனவரும் பெருங் கதையானும்
உணர்க. நாகலோகம் - பாம்புச் சாதியார் வாழும் கீழுலகம். இது சைன நூல்களில்
பவணலோகம் எனப்பெறும். நாகருலகினும் இன்பநலம் சிறந்தது இது வென்பார் இவ்வாறு
அவ்வுலகத்து மகளிரும் வந்து நீராடுதலைக் கூறினார். ஞால் - நால் என்பதன் முதற்போலி.
 

 ( 10 )