(இ - ள்.) தார்உடைய மார்பினிடை - மலர்மாலை யணிந்த தம் மார்பின் கண்ணே, சார்கணை குளிப்ப - யாண்டிருந்தோ வந்தெய்திய அம்பு பாய்ந்து ஊடுருவிற்றாக, வேரொடு பறித்தனர் - அவ்வம்பை முற்றும் தம் கையாற் பறித்து, எழுத்து வரி நோக்கி - அவ்வம்பிற் பொறித்துள்ள எழுத்தாலாய முகவரியைப் படித்து, பேரொடு உறு பீடு உடையன் ஆர் என வினாவி - போர் ஆற்றுதலிலே பொருந்திப் பெருமைமிக்க இப்பேருடையன் யாவன் என்று அயனின்றாரை வினவி, நேர்படுதும் - அம்மெய்ம் மறவனோடு யாம் போர் ஆற்றுதும், என்று - என்று கருதி, சிலர் நேடுபு திரிந்தார் - சில மறவர்கள் அப்பெயருடையாரைத் தேடித் திரிவாராயினர், (எ - று.)முகவரி - அவ்வம்புக்குரியான் பெயர் இடம் முதலிய குறித்தெழுதப்பட்ட வரிகள். தம் கண்முன் னில்லாமலே தம்மார்பிற் கணை பாய்ச்சிய மறவனைப் புகழ்வார் பேரொடு உறு பீடுடையன் என்றார். அம்பின்கண் அதற்குரிய மறவன் பெயர் பொறிக்கப்படுதல் மரபு. இதனை இராமாயணத்தும் வாலியின் மார்பில் ஏவிய இராமனுடைய அம்பை வாலி பறித்து அதன்கட் பொறிக்கப்பட்டுள்ள பெயரால் இஃது இராமன் அம்பு என்றறிந்தான் என்னும் பகுதியானும் உணர்க. |