அரிசேனன் போர்க்கு வருதல்

1283. வெறிமின் விரிகின்ற விறலாழி யிறைதோழ
னறிமின் 3பெயர்யானவ் வரிசேன னெனநின்றே
னெறிமினெதி ரென்னொ டிகல்வல்லி 4ருளராயின்
மறிமி னதுவன்றி யுயிர்வாழ லுறினென்றான்.
         (இ - ள்.) வெறி மின் விரிகின்ற - ஒழுங்குபட ஒளி வீசுகின்ற, விறல் ஆழி
இறைதோழன் - வெற்றிபொருந்திய உருளைப்படையினையுடைய பேரரசனாகிய
அச்சுவக்கிரீவனுடைய நண்பன், பெயர் அரிசேனன் என யான் நின்றேன் - பெயர்
அரிசேனன் என்று நான் அழைக்கப்பட்டு விளங்குகிறேன்; அறிமின் - இதனை உணர்ந்து
கொள்ளுங்கள்; என்னொடு இகல் வல்லிர் உளர் ஆயின் - என்னோடு பகைத்துப் போர்
செய்யக் கூடியவர்கள் இருக்கின்றீர்களாயின், எதிர் எறிமின் - எதிர்த்துப் போர்
செய்யுங்கள், அது அன்றி - அவ்வாறில்லாமல், உயிர் வாழல்உறின் - உயிர்வாழ்தலை
விரும்புவீர்களாயின், மறிமின் என்றான் - பெயர்த்து நீங்கிப் போங்கள் என்று கூறினான்.

வெறி என்னும் சொல் ஆவேசம், ஒழுங்கு, ஆடு, கள், மணம், வெறியாட்டு மயக்கம்,
முருகன்பூசை முதலிய பொருள்களைத் தந்து நிற்கும். “வெறிகொண்ட புள்ளினம்“ என்னும்
கலித்தொகையும் காண்க.

( 153 )