வியாக்கிரரதன் அரிசேனனை எதிர்த்தல்

1284. அங்கவன் மொழிந்தமொழி கேட்டலு மருக்கன்
வெங்கணை தெரிந்தது விலக்கிவிறல் வெய்யோ
யிங்கிவ னினக்குநிக ரோவென விசைத்தே
பொங்குபுலித் தேர்ப்பெயரன் போந்துபொர லுற்றான்.
     (இ - ள்.) அங்கு அவன் மொழிந்த மொழி கேட்டலும் - அவ்விடத்தில் அந்த
அரிசேனன் என்பவன் சொன்ன சொற்களைக் கேட்ட அளவில், அருக்கன் வெங்கணை
தெரிந்தது - அருக்கி கீர்த்தியானவன் அவனை எதிர்த்துப் போர் செய்வதற்காகச் சென்று
கொடிய கணைகளை ஆராய்ந்து எடுத்துச் செலுத்தத் தொடங்கியதை, பொங்கு - மிகுந்த
சினத்தையடைகிற, புலித்தேர்ப்பெயரன் - வியாக்கிரரதன் என்பவன், விலக்கி - தடுத்து,
விறல் வெய்யோய் - வெற்றியை உடைய வீரனே!; இங்கு நினக்கு இவன் நிகரோ என
இசைத்து - இவ்விடத்திலே நின்னோடு போர் செய்வதற்கு இவன் ஒப்பாவனோ என்று
கூறி, போந்து - தானே போர் செய்வதற்கு வந்து, பொரல்உற்றான் - போர் செய்யத்
தொடங்கினான்,
(எ - று.)

இப்பாட்டின் மூன்றாவது அடி; “இங்கிவ னினக்குநிக ராகலுறுமென்றே“ என்று சில படிகளில்
காணப்பெறுகிறது. அருக்ககீர்த்தி இளவரசனாதலின் வியாக்கிரரதன் இவ்வாறு கூறித்
தடுக்கலானான். வியாக்கிரரதன் அருக்ககீர்த்தியின் படைத்தலைவன்; அரிசேனன்
அச்சுவகண்டனுடைய தோழன்.

( 154 )