சேடிநாட்டின் சிறப்பு | 129. | 1பூக்க ளாவன பொன்மரை பூம்பொழில் காக்க ளாவன கற்பகச் சோலைகள் வீக்கு வார்கழல் விஞ்சையர் சேடிமே லூக்கி யாமுரைக் கின்றதிங் கென்கொலோ. | (இ - ள்.) வீக்குவார்கழல் விஞ்சையர் சேடி - இறுக்கப்பட்ட நீண்ட வீரக்கழலை யணிந்த வித்தியாதரர்களது உலகில்; பூக்கள் ஆவன பொன்மரை - மலர்களாக விளங்குவன பொற்றாமரை மலர்களாம்; பொழில் பூ காக்கள் ஆவன - பெருமை பொருந்திய பூஞ்சோலைகளாவன; கற்பகச் சோலைகள் - கற்பக மரங்களின் கூட்டங்களாம்; மேல் - இதற்குமேல்; ஊக்கியாம் இங்கு உரைக்கின்றது - உள்ளங்கிளர்ந்து நாம் இவ்விடத்திலே எடுத்துக் கூறுகின்றது; என்கொலஓ - மற்றும் யாதோ? (எ - று.) பொன்மயமான தாமரை மலர்களும் கற்பகச் சோலைகளும் நிறைந்த அவ்வித்தியாதரர் உலகைப்பற்றி இதற்கு மேலும் கூறல் வேண்டுமோ என்பதாம். மரை முதற்குறை விகாரம். பொழில் - பெருமை. இதனை, “புவியும் சோலையும் பெருமையும் பொழிலே“ “பாடுமாண் பாழிமீளி பணைபொழில் பகடுமூரி“ என்பவைகளால் உணர்க. கற்பகங்கள்; மத்தியாங்கம், தூரியாங்கம், பூடணாங்கம், மாலியாங்கம், தீபாங்கம், கிருகாங்கம், சோதிராங்கம், போசனாங்கம், பாசனாங்கம், வஸ்திராங்கம் எனப் பத்துவகைப்படும் என்பது சைன நூற்கொள்கை. இவை முறையே, பலவகைப் பானங்களையும், பலவகை வாத்தியங்களையும், பலவகை அணிகலன்களையும், பலவகை மாலைகளையும், பலவகை மணிவிளக்குகளையும், பிராசாத மண்டபாதிகளையும், ஞாயிறு திங்கள்களின் ஒளியினையடக்கும் ஒளியினையும், நான்குவகை யுணவுகளையும், வேண்டிய கலங்களையும் புதுமையான ஆடைகளையும் கொடுக்கும். இம்மரங்களின் செறிவையே கற்பகச் சோலை என்பர். யாம் - தன்மைப்பன்மை. | ( 11 ) | | |
|
|