அரிசேனன் வீழ்ந்தவுடன் அவன் படைஞர் நிலைமை

1295. அழலான்பெய ரவன்மைத்துன
     னரிசேனனை யெறியக்
கழலான்கட லொளியான்றமர்
     கலந்தார்த்தனர் கரிய
நிழலான்றமர் கரிந்தார் சில
     ரிரிந்தார்பலர் நெரிந்தார்
தழலாரயில் வலனேந்துபு
     சார்ந்தார்தலை சரிந்தார்.
     (இ - ள்.) அழலான் பெயரவன் மைத்துனன் - அருக்க கீர்த்தியின் மைத்துனனாகிய வியாக்கிரரதன், அரிசேனனை எறிய - அரிசேனனைக் கொன்றவுடைனே, கழலான் - வீரக்கழலை அணிந்தவனும், கடல் ஒளியான் -கடல் வண்ணனுமாகிய திவிட்டனுடைய, தமர் - படைஞர்கள், கலந்து ஆர்த்தனர் - கூடி ஆரவாரித்தனர், கரிய நிழலான் தமர் - கருநிறமுடையவனாகிய அச்சுவகண்டனுடைய படைஞர்கள், சிலர் கரிந்தார் - சிற்சிலர் உளம் கருகினர், பலர் இரிந்தார் - பலர் புறங்கொடுத்தோடினர், நெரிந்தார் பலர் இறந்தார், தழல்ஆர் அயில்வலன் ஏந்துபு சார்ந்தார் - தீக்காலும் வேற்படையை வலக்கையின் ஏந்தி வியாக்கிரரதனை எதிர்த்தெய்தின பல மறவர்கள், தலை சரிந்தார் - தலைகள் வீழப்பெற்றார்கள், (எ - று.)

     அரிசேனன் மாண்டமை கண்டு திவிட்டநம்பியின் படைஞர் மகிழ்ந்து ஆரவாரித்தனர். அச்சுவகண்டன் படையிலுள்ளோர் இரிந்தாரும், நெரிந்தாரும், தலை சரிந்தாரும் ஆயினர் என்க.

(165)