குறிஞ்சி நிலம் | வேறு | 13. | முன்றி லெங்கு முருகயர் பாணியும் சென்று வீழரு வித்திர ளோசையும் வென்றி வேழ முழக்கொடு கூடிவான் ஒன்றி நின்றதி ரும்மொரு பாலெலாம். | (இ - ள்.) (அந்நாட்டில்) ஒருபால் எலாம் - ஒருபக்கம் முழுவதிலும்; முன்றில்எங்கும் - குறவர்களின் வீட்டு முற்றங்கள் தோறும், முருகு அயர் பாணியும் - முருகக்கடவுளை வழிபட்டு வெறியாடுவார் எழுப்பும் பாட்டிசையும்; சென்றுவீழ் - சுனை நிரம்பி வழிந்துசென்று பாறை மருங்கினின்று வீழும்; அருவித்திரள் ஓசையும் - அருவிக்கூட்டங்களின் ஒலியும்; வென்றிவேழ முழக்கொடு கூடி - தம் பகையாகிய புலிகளை வென்று பிளிறும் யானைகளின் முழக்கத்தோடு கூடி; வான் ஒன்றிநின்று அதிரும் - விண்ணிற்சென்று தாக்கி எதிரொலிசெய்து முழங்கும். (எ - று.) குறிஞ்சி நிலமக்கள் முருகக்கடவுளுக்கு வெளியாட்டயரும் ஒலியும், அருவியொலியும், யானைகளின் பிளிற்றொலியும் குறிஞ்சி நிலத்தில் மிக்கு விளங்குதலை இச்செய்யுளில் கூறினார். ஒருபாலெலாம் என்றது குறிஞ்சி நிலத்தை. குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் முருகன் என்பது “சேயோன் மேய மைவரை யுலகமும்“ என்பதனாற் பெறப்படும். இல்முன் என்பது முன்றில் என இலக்கணப்போலியாக மாறிநின்றது. இதன் பொருள் வீட்டின் முன்னிடம் என்பது. வீடுகளின் முன்னரோ கோயில்களின் முன்னரோ வெறியாட்டு நிகழ்கின்றதென்று கொள்க. அதிரும்மொரு - மகரமெய் விரித்தல். | ( 13 ) | | |
|
|