(இ - ள்.) வரையின்மேல் - அவ்வெள்ளிமலையின் உச்சியில், மதி கோடுஉற - திங்கள் தன் உச்சியில் பொருந்தும்படி; வைகிய - தங்கிய; திருவ நீள் ஒளித் தென்திசை சேடிமேல் - அழகிய நீண்ட ஒளியையுடைய அவ்வித்தியாதர உலகின் தென்திசைப் பகுதியில்; இரதநூபுரச் சக்கரவாளம் என்று உரைசெய் - இரத நூபுரச் சக்கரவாளம் என்று பெயர் சொல்லப் பெறுகிற; பொன்நகர் ஒன்று உளது என்ப - அழகியநகரம் ஒன்று இருக்கின்றது என்று சொல்வார்கள். (எ - று.) இரத நூபுரச்சக்கரவாளம் என்னும் நகரம், விசயார்த்த பர்வதம் என்னும் வெள்ளிமலையின் தென்புறத்தில் உள்ளது. ஐம்பது வித்தியாதர நகரங்களையுடையது. திருவ என்னும் இடத்தில் - அ : அசை. இவ்வாறு அசை வருதலை. “திருவமேகலை“, “திருவமாமணி“, “திருவச் சீறடி“, “திருவ மன்னவன்“ என்னுமிடங்களிலும் காண்க. |