அரிகேதனனின் ஆரவாரப் பேச்சு

1309. கள்ளாவது குருதிப்புனல் கலனாவது கையே
நள்ளாதவ ருடலம்பிற கறியாவது நமக்கென்
றுள்ளாதவ ருளராங்கொலிவ் வுலகின்னென வுரையா
விள்ளாதவர் சிலர் பின்செல விரல்வீளைகள் விளியா.
     (இ - ள்.) நமக்கு - எனக்கு, கள் ஆவது குருதிப் புனல் - பருகும் கள் யாதெனில்
அது என் பகைவரின் குருதியே, கலன் ஆவது கையே - பருகற்குரிய கலம் யாதெனில்
அது என் கையே, பிற கறியாவது நள்ளாதவருடலம் - அக்கள்ளுடனே கறிக்கும் கறிகள்
யாவையெனில் அவை என் பகைவருடைய உடற்றசைகளே, என்று - என்று கூறிக்கொண்டு,
இவ்வுலகில் உள்ளாதவர் உளர் ஆம்கொல் - இவ்வுலகத்திலே என்னுடைய
மறத்தன்மையைக் கருதாத பகைவரும் உளரேயோ, என உரையா - என்று வினவுவானாய்,
விள்ளாதவர் - தன் நண்பர்கள், சிலர் - ஒருசிலர், பின்செல- தன் பின்னர்த் தொடர்ந்து வாரா நிற்ப, விரல் வீளைகள் விளியா - விரல்களை
வாயில் வைத்துச் சீழ்க்கையடித்துப் பகைவரை அறை கூவிக்கொண்டு, (எ - று.)

விளியா இவன் வருகின்றதோர் பொலிவே என்று 1311 ஆம் செய்யுளிற் சென்று முடியும்.

பகைவர்களின் குருதியே யான் குடிக்கும் கள், என் கைகளே அக்கள்ளைப் பருகுதற்குரிய
கலம், பகைவருடற் றசையே யான் அக்கள்ளுடன் றின்னும் கறியாம், என்னை
எண்ணாதவரும் வீரருள் உளரோ என்று தன் விரல்களால் சீழ்க்கையடித்து அழைத்து
என்க.

( 179 )