(இ - ள்.) களித்தலத்து எழுந்து - கள்ளுண்ணுமிடத்தே தோன்றி; அம்பொன் மாலையார்கள் - அழகிய பொன்னாலாகிய மாலையை அணிந்தவர்களும்; அரத்தவாய்க் கொம்பு அனார் - சிவந்த வாயையுடையவர்களுமாகிய பூம்கொம்பு போன்ற மகளிர்; கொடுத்த முத்த நீரவாய - கொடுத்த முத்துப்போன்ற தெளிந்த நீரையுடையனவான; கோழ் அரைப் பைம்பொன் வாழை - கொழுவிய அரையையுடைய பசிய பொன்போன்ற நிறமுடைய வாழை மரங்கள்; செம்பொனே பழுத்து வீழ்ந்த சோதியால் - செம்பொன்னைப் போலப் பழுத்தலானே வீசா நின்ற ஒளியுடைமையாலே; வம்பு வந்து - அவற்றின்கண் ஒரு புதுமை தோன்றப்பட்டு, ஒசிந்து சாறுபாய்ந்து சோர்வமானும் - அவை அசைந்து சாறு சொரிவன போன்று விளங்கும். (எ - று.) பொன்னகரமாகிய அந்நகரின்கண், கள்பருகுமிடத்திலே முளைத்த வாழைமரங்கள் பொன்மயமாய்ப் பழுத்து, பொன் ஒளிவீசி நிற்றலால்; அவற்றின்கண் ஒரு புதுமைதோன்ற, அவை ஒசிந்து தேன் சொரிவன போன்றன என்பதாம்; களித்தலம் - கள்பருகுமிடம். வாழைப்பழத்தின் பொன்னொளிக்குச் சாறு உவமை. சாறு - தேன். மகளிர் வாய்நீர் கொப் புளித்தலால் வாழைமரங்கள் செழித்துப்பூக்கும் என்னும் வழக்குப்பற்றி, “அரத்தவாய்க் கொம்பனார் கொடுத்த முத்த நீரவாய...வாழை“ என்றார். இதனை, “இறுநுசுப்பி னந்நலார் ஏந்துவள்ளத் தேந்திய நறவம் கொப்புளித்தலின்............................ ...............அரம்பை முலையினிருந்தவே“ எனவரும் சீவகசிந்தாமணியானும் (74) உணர்க. கொடுத்தநீர் என்றது கொப்புளித்துமிழ்ந்த மதுநீர் என்றவாறு. மரங்கள், கோழரை, முள்ளரை, பொரியரை, பொகுட்டரை என்னும் நான்குவகை அரைகளையுடையன. அவற்றுள் வாழை கோழரையின் பாற்படும் என்பது வெளிப்படை. கோழரை - வழவழப்பான சுற்றுப்புறத்தை யுடையது. அரை - சுற்றுப்புறம். |