1312. ஆழிப்படை யுடையான்றம 1னரிகேதன னென்போன்
பாழிப்படை பொருவாரொடு 2பயில்போரல தறியே
னேழைப்படை யிதுவோவெனக் கெதிராகுவ தாயில்
வாழிப்படை பொருதென்னென வையாநனி வந்தான்.
     (இ - ள்.) ஆழிப்படை உடையான் தமன் - சக்கரப் படையை உடையவனாகிய
அச்சுவகண்டன் படைஞனாகிய, அரிகேதனன் என்போன் - அரிகேதனன் என்னும்
பெயரையுடைய இவ்விஞ்சையன், பாழிப்படை பொருவாரொடு - பெரிய படையோடே
போர் செய்கின்ற வீரர்களுடன், பயில் போர் அலது அறியேன் - போர் ஆற்றுதலே
அல்லால் வீண்பேச்சுப் பேசுதல் முதலியவற்றை யான் அறிந்தேனில்லை, ஏழைப்படை -
எளிய மானிடப் படையாகிய, இதுவோ - இதுதானோ, எனக்கு எதிர் ஆகுவது - என்னுடன்
எதிர்த்துப் போர் செய்யும் ஆற்றலுடையது, ஆயில் வாழி - அவ்வாறு ஆற்றலுடையதாயின்
அது வாழ்க, படைபொருது என் - இவ்வேழைப் படையோடே போர் செய்தலால் எனக்கு
வரும் புகழ்தான் யாது?, என - என்று, வையா - இகழ்ந்து பேசி, நனி வந்தான் - விரைந்து
மேல் வருவானாயினன், (எ - று.)

     அவ்வாறு வந்த அரிகேதனன்; போர் செய்வதல்லது வீண் பேச்சுக்கள் பேச
அறியேன்; இம்மானிடப்படை ஏழைப்படை; இதன்கண் எனக்கு நிகராய மறவர் இரார்;
இவரோடு போர் செய்தலிற் பயன் என்னை! என்று இகழ்ந்து பேசிக்கொண்டு வந்தான்
என்க.

( 182 )