தூமகேதனன் போர்க்கு வருதல்

1317. வாழுநா ளுலந்து மற்றவன் மண்மேல்
     மலையென மறிதலு மலைமே
லாழியான் றமர்க ளஞ்சினா ரஞ்சு
     மாயிடை யடுதிற லுடையா
னூழிநா ளெரியுங் கூற்றமு முருமு
     மொப்பவன் கைப்படை நவின்றான்
சூழிமா லியானைத் 1துளைமதஞ் செறிப்பத்
     தோன்றினான் றூமகே தனனே.
     (இ - ள்.) வாழும் நாள் உலந்து - தான் வாழும் நாள் முடிந்து விட்டமையானே,
மற்றவன் - அவ்வரிகேதனன், மலையென மண்மேல் மறிதலும் - மலைபுரண்டாற் போன்று
மண்ணின்மேல் பிணமாய்ப் புரண்டவுடனே, மலைமேல் ஆழியான் தமர்கள் -
உத்தரசேடியின்கண் வதியும் அச்சுவகண்டன் படைஞர்கள், அஞ்சினார் - பெரிதும்
அஞ்சுவாராயினார், அஞ்சும் ஆயிடை - அவ்வாறு அவர்கள் அஞ்சும்பொழுது, அடுதிறல்
உடையான் - பகைவரைக் கொல்லும் ஆற்றல் மிக்கவனும், ஊழிநாள் எரியும் -
ஊழிக்காலத்தே உலகினை அழிப்பதாகிய தீயும், கூற்றமும் - மறலியும், உருமும் -
இடியேறும், ஒப்பவன் - போன்றவனும், கைப்படை நவின்றான் - கையின்கட் படைகளை
மேற்கொண்டவனும், துளை மதம் செறிப்ப - மூவகைத் தொளையின் வழியாக மதநீர்
நிறைந்து வழியும், சூழிமால் யானை - முகபடாமுடைய யானையின் மிசையேறி
ஊர்பவனுமாய், தூமகேதனன் தோன்றினன் - தூமகேதனன் என்பான் வந்து
தோன்றலானான், (எ - று.)

( 187 )