தூமகேதனனின் ஆரவார வீரமொழி

1318. மலையெடுத் திடுகோ மாநிலம் பிளக்கோ
     மறிகட லறவிறைத் திடுகோ
வுலைமடுத் துலகம் பதலையா வூழித்
     தீமடுத் துயிர்களட் டுண்கோ
சிலையிடத் துடையார் கணைவலத் துடையார்
     சிலர்நின்று செய்வதீங் கென்னோ
நிலையிடத் தவரு ணிகரெனக் குளரே
     னேடுமின் சென்றென நின்றான்.
     (இ - ள்.) மலை எடுத்திடுகோ - உலகின்கண்ணுள்ள இமய முதலிய மலைகளைத்
தூக்குவேனோ! அல்லது, மாநிலம் பிளக்கோ - பெரிய பூமியை இரண்டாகப் பிளப்பேனோ!
அன்றி, மறிகடல் அற இறைத்திடுகோ - அலைகள் மறிகின்ற கடல்கள் நீர் அற்றுப்
போம்படி காலால் எற்றுவேனோ! அன்றி, உலகம் பதலையா - இவ்வுலகமே ஒரு
பானையாகக்கொண்டு, உலைமடுத்து - அப்பானையை அடுப்பில் ஏற்றி வைத்து, ஊழித்தீ
மடுத்து -அவ்வடுப்பில் ஊழித்தீயைக் கொளுவி, உயிர்கள் அட்டு உண்கோ - உயிர்களைச்
சமைத்து உண்பேனோ, (என் பெருமைக்கேற்ப இன்னோரன்ன செய்வதல்லாமல்,)
சிலையிடத்துடையார் - வில்லை இடக்கையிலுடையராய், கணைவலத்துடையார் -
அம்புகளை வலக்கையிலுடையராய், சிலர் - ஒருசில பேதையர் ஈண்டு உளர், நின்று
செய்வது ஈங்கு என்னோ - இவ்விடத்தே நின்று யாம் செய்தற்குரிய செயல் யாதுளது?,
நிலையிடத்தவருள் - இப்போர்க்களத்தே நிற்குமவருள், எனக்கு நிகர் உளரே - எனக்கு
நிகராய் நின்று போர் செய்வாரும் உளர்கொல்லோ!, சென்று நேடுமின் - உளராயில் நீயிர்
சென்று தேடுங்கோள் என்று கூறி, நின்றான் - ஓரிடத்தே நிற்பான் ஆயினன், (எ - று.)
அவ்விடத்தே தோன்றிய தூமகேதனன், மலை எடுத்திடுதல் முதலிய அருஞ்செயலைச்
செய்வதன்றி, ஈண்டு வில்லுங் கணையும் கொண்டு நிற்கும் புல்லியரோடு யான் போர்புரிதல்
தகுமோ! இக்களத்தே என்னோடு எதிர்க்கும் ஆற்றலுடையார் யாரேனும் உளராயின்
அவரைத் தேடுங்கோள் எனக் கூறி நின்றான் என்க.

( 188 )