தூமகேதனன் மாய்தல்

1325. தட்டுப்போ ரதனுட் டமனியக் கடிப்புந்
     தாரினோ டாரமுஞ் சரியப்
பட்டுப்போ யுருண்டா னவருளங் கொருத்தன்
     பருவரை கரியதொன் றனையான்
துட்டப்போ ரியானைத் தூமகே தனனுந்
     தோற்குமோ வொருவனுக் கென்று
மட்டுப்போ 1ரணிந்த மணிமுடி மன்னர்
     மயங்கினார் மானமு மிழந்தார்.
     (இ - ள்.) தட்டுப் போரதனுள் - தடியால் ஆற்றிய அப்போரின்கண், தமனியக்
கடிப்பும் - பொன்னாலியன்ற செவியணியும், தாரினோடு ஆரமும் சரிய - மலர்
மாலையோடே மணிவடங்களும் அற்றுவீழ, அவருள் அங்கு ஒருத்தன் - அவ்விருவருள்
ஒரு மறவன், பருவரை கரியதொன்று அனையான் - கறுத்த பெரியதொரு மலையை
ஒத்தவன், பட்டுப்போய் உருண்டான் - மாண்டு மண்மிசை உருள்வானாயினன்,
துட்டப்போர் யானைத் தூமகேதனனும் - கொடிய போரினை ஆற்றவல்ல யானையை
உடைய தூமகேதனன் என்னும் சிறந்த மறவனும்; ஒருவனுக்குத் தோறகுமோ என்று -
பகைவன் ஒருவனுக்குத் தோற்றுவிட்டானோ என்று வியந்து, மட்டுப்போது அணிந்த -
தேன் நிறைந்த மலர்மாலையை அணிந்த, மணிமுடி மன்னர் - மணிகள் அழுத்திய
முடியணிந்த அரசர்கள், மானமும் இழந்தார் - தம் பெருமையையும் இழந்து, மயங்கினார் -
திகைத்தார்கள், (எ - று.)

     தட்டுப்போர் : விகாரம்; தண்டுப் போர் என்க. கடிப்பு - ஒருவகைக் காதணி.
இதனைக் கடிசூத்திரம் என்ப. அவ்வாறு போர் செய்தவர்களுள் ஒருவனாகிய தூமகேதனன்
சுவலனதரனாற் கொல்லப்பட்டான், சிறந்த மறவனாகிய தூமகேதனனும் தோற்று
மாண்டானோ என வியந்து விச்சாதரர் மானமிழந்து மயங்கலாயினர்; என்க.

( 195 )