அழல்வேகன் போருக்கு வருதல்
வேறு

1326. பொருதாங் கழிந்து புகைகேது வீழ
     வரிகேது முன்ன 2முடிய
எரிதாங்கு வேலொ டினியீங்கு நின்று
     பெறுகின்ற தொன்னை 3யெழுகென்
3றரிதாங்க ணாவ தெளிதாகு மாறொ
     ரமர்செய்கை கொண்டு பிறர்முன்
கரிதாங்க ளான கழன்மன்ன ரேறு
     வருமங்கொர் காளை கடிதே.
          (இ - ள்.) பொருது ஆங்கு அழிந்து புகை கேது வீழ - சுவலனரதனோடு
போர்செய்து அவ்விடத்தே தோற்றுத் தூமகேது என்பான் மாண்டு வீழவும், முன்னம் -
இவன் மாளும் முன்னரே, அரிகேது முடிய - அரிகேதனன் மாளவும், இனி - இனியும்,
ஈங்கு - இவ்விடத்தே, எரிதாங்கு வேலொடு - ஒளிதங்கிய வேற்படையும் ஏந்தி, நின்று
பெறுகின்றது என்னை - நாணமின்றி வாளாநின்று யாம் பெறற்பாலது யாது, எழுகென்று -
எல்லீரும் புறப்படும்கோள் என்று, ஆங்கு அரிது ஆவது - அவ்விடத்தே
செயற்கரியதாயிருக்கும் போர் ; எளிதாகுமாறு - எளிதாகும்படி, ஓர் அமர்செய்கை கொண்டு
- தக்கதொரு சிறந்த போர்ச் செயலை மேற்கொண்டு, பிறர்முன் - பிற வீரர்களுக்கு முன்பு,
கரிதாங்கள் ஆன - சிறந்த வீரர்களுக்குச் சான்று தாங்களே ஆகின்ற சிறப்புடைய, கழன்
மன்னர் ஏறு - வீரக்கழலையுடைய மன்னர்களுள் சிறந்த ஆண்சிங்கம் போல்வானாகிய,
அங்கொர் காளை - அவ்விடத்தே ஓர் இளைஞன், கடிதேவரும் - விரைந்து
வருவானாயினன்; (எ - று.)
    
     அப்பொழுது, அழல்வேகன் என்னும் விச்சாதரன், “புகைகேதுவும், அரிகேதுவும்,
மாண்டமை கண்டு யாம் வாளேந்தி வாளா நிற்பதோ எல்லீரும் புறப்படுங்கோள்“
எனக்கூறிப் பகைவரை எளிதில் வெல்லற்குரிய ஒரு போர் முறையை மேற்கொண்டு
வருவானாயினன், என்க.

( 196 )