அழல்வேகனைத் தேவசேனன் எதிர்தல்

1328. அருமாலை வேல்வல் லழல்வேக னாகு
     மவனாயி லாக வமைக
எரிமாலை வேல்வ லிளையார்க ணிற்க
     விவனென்னொ டேற்க வெனவே
1பொருமாலை வாள்கை பொலிகேட கத்த
     னணிபோ திலங்கு முடியன்
செருமாலை மன்ன ரிறைதேவ சேன
     னெதிரே சிவந்து செலவே.
     (இ - ள்.) அருமாலை வேல்வல் அழல்வேகன் ஆகும் - பெறற்கரிய வெற்றி
மாலையையுடையவனும் வேற்படை கொண்டு போர் ஆற்றுதலிலே வல்லவனும் ஆகிய,
அழல் வேகன் என்னும் வீரன் போலும் ஈண்டு வருவோன், அவன் ஆயில் ஆக -
அவ்வழல்வேகனே ஆயின் நன்று ஆகுக, அமைக - எனக்கு எதிராக அவன் அமைக,
இவன் என்னோடு ஏற்க - இவ்வழல் வேகன் என்னோடு போர் ஆற்றக் கடவன், ஆதலின்
- எரிமாலை வேல்வல் இளையார்கள் நிற்க - சுடர் ஒழுங்குற்ற வேற்படை வல்லுநரான நம்
இளைஞராகிய வீரர்கள் ஈண்டே நிற்பாராக, எனவே -என்று கூறி, பொருமாலை வாளன் -
போர் செய்யும் தன்மையுடைய வாளை ஏந்தியவனாய், அணிகேடகத்தன் - அழகிய
கிடுகுடையனாய், மணிபோது இலங்கு முடியன் - மணிகளும் மலர்களும் திகழ்கின்ற
முடிக்கலனை உடையவனாய், செருமலை மன்னர் இறை - வெற்றி மாலை சூடுமன்னர்
மன்னனாகிய, தேவசேனன் - தேவசேனன் என்பான், சிவந்து எதிரே செல - சினந்து
அவ்வழல் வேகனுக்கு எதிரே செல்லா நிற்க, ( ) அழல்வேகன் - அச்சுவகண்டனைச்
சேர்ந்தவன்; தேவசேனன் - சடிமன்னன் மைத்துனன். அழல்வேகன் வருகையைக் கண்டு
தேவசேனன், இவன்றான் அழல்வேகன் என்னும் புகழ்பெற்ற வீரன் போலும், அவனாயின்
நன்று அவனோடு யானே எதிர்ப்பேன் என்று சிவந்து எதிரே வந்தான் என்க.

( 198 )