(இ - ள்.) காந்தி நின்ற - ஒளியானது நிலைபெற்று நின்ற; கற்பக நிழல் கற்பக மரங்களின் நிழலிலே; பாரிசாதம் கலந்து - பாரிசாத மரங்கள் பொருந்தி; கைஅறப் பாய்ந்து எரிந்த போல் விரிந்து - பார்த்தோர் செயலறும்படி முழுவதும் எரிபட்டாற் போல மலர்ந்து; ஏர்செய - அழகு செய்ய; வாய்ந்து - பொருந்தி. எரிந்த செம்பொன் மாடவாயில் - தீயிலிட்டுப் புடம்வைக்கப் பெற்று மாற்றுயர்ந்த சிவந்த பொன்னினாலாகிய மாளிகைகளின் வாயிலோடு கூடிய; ஆறு - வழிகள்; கண்கொளப் போந்து எரிந்தபோல் - எல்லோரும் பார்க்குமாறு முழுவதும் எரிபட்டாற்போலத் தோன்றும்படி; மரம் - எரிமரங்கள்; புறம் - வாயிற்புறத்திலே; பொலிந்து இலங்கும் - மிகுதியாக விளங்கும். (எ - று.) பாரிசாதம் கற்பகச் சோதியால் செந்நிறமான மலர்கள் நிரம்பி முழுவதும் எரிபட்டாற்போல விளங்கும் என்க. இரவில் தீப்பற்றினாற் போன்று விளங்குவதாய ஒருமரம் எனவும், ஒளிமரம் எனவும் வழங்கும். அவ்வகை மரங்கள் அம்மலையில் உள்ள பொன்மயமான மாளிகைகளின் வாயிலிற் பொருந்தி இரவில் ஒளி செய்யும்போது, தொலையில் இருந்து பார்ப்பவர்கட்கு அத்தெருவிடங்கள் தீப்பட்டாற் போலத் தோன்றுந் தன்மை பின்னிரண்டடிகளிற் கூறப்பட்டது. |