சுவணகேது போர்க்கு எழுதல்

1335. தாம மார்ந்த மணியைம்பாற்
     றைய றாதை 1மைத்துனனாஞ்
சேம மார்ந்த தனிச்செங்கோற்
     றேவ சேனன் 2கைவாளாற்
சாம வண்ணன் றழல்வேகன்
     சாய்ந்தான் சாய்ந்த 3பொழுதத்தே
தூம மாரங் கமழ்குஞ்சிச்
     சுவண கேது 4தோன்றின னால்.
     (இ - ள்.) தாமம் ஆர்ந்த மணி ஐம்பால் தையல்தாதை - மலர்மாலை பொருந்திய
நீலமணி போன்ற நிறமுடைய அளகக் கற்றையை உடைய சுயம்பிரபையின் தந்தையாகிய
சடிமன்னனுடைய, மைத்துனன்ஆம் - மைத்துனன் ஆகின்ற, சேமம் ஆர்ந்த தனிச்
செங்கோல் - காவற்றொழில் நன்கமைந்த ஒப்பற்ற செங்கோன்மைச் சிறப்புடைய,
தேவசேனன் - தேவசேனனுடைய, கைவாளால் - கையின் கண்ணதாகிய வாட் படையாலே,
சாமவண்ணன் - இருள்நிறமுடையனாகிய, தழல்வேகன் - அழல்வேகன் என்பான்,
சாய்ந்தான் - இறந்தான், சாய்ந்தபொழுதத்தே - அவன் இறந்து வீழ்ந்தவுடனே, தூமம்
ஆரம்கமழ் குஞ்சி - நறுமணப்புகையும் சந்தனமும் கமழ்கின்ற தலைமயிரையுடைய,
சுவணகேது - சுவணகேது என்னும் வீரன், தோன்றினன் - போர் செய்யப் புகுந்தான்,
(எ -று.)

சடிமன்னன் மைத்துனனாகிய தேவசேனனால் அழல்வேகன் கொல்லப்பட்டவுடனே
சுவணகேது என்னும் ஒருவீரன் போர்க்களத்தே வந்து தோன்றினான் என்க.

( 205 )