இன்பத்திடையே தென்றல்

134. மாசில் கண்ணி மைந்தரோடு மங்கை மார்தி ளைத்தலில்
1பூசு சாந்த ழித்திழிந்த புள்ளி வேர்பு லர்த்தலால்
வாச முண்ட 2மாருதந்தென் வண்டு பாட மாடவாய்
வீச வெள்ளி லோத்திரப்பொ தும்பர் பாய்ந்து விம்முமே.
 

     (இ - ள்.) மாசில் கண்ணி மைந்தரோடு - குற்றமற்ற மாலையை அணிந்த
ஆடவர்களோடு; மங்கைமார் திளைத்தலில் - நங்கையர்கள் இன்பப் பெருக்கில்
திளைக்கும்போது; பூசுசாந்து அழித்து இழிந்த புள்ளி வேர்பு உலர்த்தலால் -
அணியப்பெற்ற மணப் பொருள்களைக் கலைத்துக்கொண்டு வழிந்த புள்ளி புள்ளியான
வியர்வையை உலர்த்து மாற்றால்; வாசம் உண்ட மாருதம் - மணத்தினைப் பெற்ற தென்றற்
காற்றானது; தென் வண்டு பாட - அழகிய வண்டுகளானவை இசையைப்பாட; மாடவாய்
வீச - மாளிகை களினிடத்திலே சென்று வீசுதற்பொருட்டு; வெள்ளிலோத்திரப் பொதும்பர்
பாய்ந்து விம்மும் - வெள்ளிலோத்திர மரங்கள் பொருந்திய பொழிலிலே சென்று மேலும்
மணப்பெருக்கையடையும். (எ - று.)

     வியர்வையைக் காயுமாறு செய்தலால் தானும் மணத்தினைப் பெற்ற தென்றற்
காற்றானது மீண்டும் மாளிகைகளிடத்திலே சென்று வீசுமாறு வெள்ளிலோத்திர மரங்கள்
பொருந்திய பொழிலிலே சென்று மேலும் மணப்பெருக்கையும் குளிர்ச்சியையும் பெறும்
என்க.

     வெள்ளிலோத்திரம் என்பது மணமும் குளிர்ச்சியும் ஒருங்கமைந்த ஒருவகை மரம்.

( 16 )

?@