(இ - ள்.) சொல்லால் மலிந்த புகழினான் - மொழியாலே மிக்க புகழையுடையவனான, சுவணகேது - சுவணகேது, சொரிகின்ற - பொழியா நின்ற, கல்லார் கொண்டல் பெயல் போலும் - மலையிடத்தே பொருந்திய முகில்கள் பெய்யும் மழையைப் போன்ற, கணையின் மாரி - அம்புமழைகளை, கழல்வேந்தன் - வெற்றிக் கழல்கட்டிய சடிமன்னன், வில்லால் செய்த - தனது வில் வித்தையின் சிறப்பாலே இயற்றிக்கொண்ட, விசாலவட்டம் - கணைகளாலியன்ற அகலிதாய வட்டம் ஒன்று, மேலும் - மேற்புறத்தும், நாலுமருங்கினும் ஆய் - நான்கு திசைகளிலும் பரவி நின்று, கொல்லாற் செய்த வேலாற்கு - கொற்றொழிலாலே வடிக்கப்பட்ட வேற்படையுடைய அச்சடியரசனுக்கு, குடையாய் - பகைவன் அம்புபடாதபடி குடையைப் போன்று, நின்று கவித்தது - கவிழ்ந்து நின்றது, (எ -று.) விசாலவட்டம் - அம்பாலியற்றும் குடை.. விசாலவட்டம் என்னும் கணைக் குடையாற் சடிவேந்தன் சுவணகேது தன்மே லேவிய கணைகள் படாதபடி தடுத்துக்கொண்டான் என்பதாம்.
|