சடிமன்னனின் போர்த்திறம்

1345. செய்ய லுற்ற மாய4மதுஞ்
     சிலையு நிலையுஞ் 5சுருங்கியவைத்
தெய்ய லுற்ற பகழியையு
     மெண்ணி வேந்த 6னெதிர்செறுப்பான்
மைய லுற்ற மதயானை
     மலைப்ப வுந்தி மாற்றானை
நையலுற்றா யெனவுரையா
     நாம வாளி சிந்தித்தான்.
       (இ - ள்.) செய்யலுற்ற மாயம்அதும் - சுவணகேது இயற்றிய மாயப் போரின்
தன்மையும், சிலையும் நிலையும் - வில்லின் இயல்பும் நின்று எய்யும் நிலையும், சுருங்கிய
வைத்து - சுருங்கியிடத்தவாய் வைத்து, எய்யலுற்ற - செலுத்துகின்ற, பகழியையும் -
அம்புகளையும், எண்ணி - ஆராய்ந்து, வேந்தன் - சடிமன்னன், எதிர் செறுப்பான் -
அவன் எதிரே நின்று போர்செய்யும் பொருட்டு, மையலுற்ற மதயானை - மதமயக்கமுடைய
தன் யானையை, மலைப்ப உந்தி - பகைவன் திகைக்கும்படி செலுத்தி, மாற்றானை -
சுவணகேதனனை நோக்கி, நையலுற்றாய் என உரையா - நீ மிகவும் வருந்திவிட்டாய்
போலும் என்று வினவி, நாமவாளி - அச்சந்தரும் அம்புகளை, சிந்தித்தான் - ஏவினான்,

சுருங்கி - நாணிடத்தே அம்பு தொடுத்தற்பொருட்டுச் சிறிது தடிப்புடையதாய்
அமைக்கப்பட்ட இடம். சிந்தித்தான் - சிந்தினான். மாயப் போர் தொடங்கிய
சுவணகேதுவினோடு போர்செய்யும் பொருட்டுச் சென்ற சடிவேந்தன் யானையை ஏறி
விற்போர் தொடங்கினான் என்க.

( 215 )