(இ - ள்.) ஆம்துணர் தமாலமும் - புதிதாக மலர்ந்த பூங்கொத்துக் களையுடைய தமால மரங்களும்; அசோக பல்லவங்களும் - அசோக மரத்தின் தழைகளும்; துணர்த்த சந்தனத் தழைத்தலை - பூங்கொத்துக்களை யுடையவாகிய சந்தனத்தழையின் மேல்; தடாயின - வளைந்து பொருந்தின. மாந்துணர்ப் பொதும்பர் வந்து வைக - மாமரங்களின் பூங்கொத்துக்களோடு கூடிய கிளைச்செறிவு வந்து தம்மேல் தங்க; அது ஊன்றலால் - அக்கிளைச் செறிவு அழுத்துதலால்; தேவதாரம் - தேவதார மரங்கள்; தேந்துணர் சுமந்து ஒசிந்து அசைந்த - தமது தேனையுடைய பூங்கொத்துக்களுடனே அந்தச் சுமையையுந் தாங்கித் துவண்டு மெலிந்தன. (எ - று.) தேவதார மரங்கள் மாங்கிளைச் செறிவு ஊன்றுதலாகிய செயற்கைப் பாரத்தின் மிகுதியைத் தாங்கமாட்டாமல் துவண்டு மெலிந்தன என்பதாம். மாந்துணர் - மரப்பெயர் முன்னர் இனமெல்லெழுத்து வரப்பெற்றது. பல்லவம் - தளிர். தமாலம் - பச்சிலைமரம். |